காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தைத் தேடுவதுதான் மனித வரலாற்றில் இதுவரைக்குமான மிகப்பெரும் சவாலாக உள்ளது. எனினும், அதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை, என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள படைகளுடன் கலந்துரையாட மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆஸ்திரேலியா வந்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8ம் தேதி எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 'பியர்ஸ் ராஃப்' ராணுவ விமான தளத்துக்கு நஜீப் வருகை தந்தார். அப்போது எட்டு விமானங்களும், ஒன்பது கப்பல்களும் விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. அங்குள்ள படைகளைச் சந்தித்து நஜீப் உரையாடினார்.
பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, "பல நாடுகள் ஒன்றிணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம். தங்களின் உறவினர்களைக் காணாமல் தவித்துக்கிடக்கும் குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த அளவு ஆறுதல் அளிக்க வேண்டும். விமானம் கிடைக்கும் வரை தேடுதல் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை" என்றார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் கடல்பகுதியில் 1,680 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் சுமார் 2,23,000 சதுர கிலோமீட்டர் அளவில் தன்னுடைய தேடுதல் பணியை ஆஸ்திரேலியா முடுக்கிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.