எந்த ஓர் உறுதியான தகவலும் இல்லாமல், எம்.எச்.370 விமானத்தைத் தேடும் பணிகள் நடந்து வருவதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் விமானப் படைத் தளபதி மார்ஷல் அங்குஸ் ஹாஸ்டன் கூறியுள்ளார்.
இந்திய பெருங்கடலில் நொறுங்கி விழுந்ததாக கருதப்படும் மலேசிய விமானத்தை தேடும் பணியில் இன்று இங்கிலாந்து நாட்டின் நீர்மூழ்கி கப்பல் இணைந்துள்ளது.
இதனை அடுத்து பெர்த்தில் உள்ள விமானத் தளத்திற்கு மலேசிய பிரதமர் நிஜாப் ரசக் விரைந்துள்ளார். ஏழு நாடுகள் இணைந்து மேற்கொண்டுவரும் தேடல் பணிகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.
இங்கிலாந்தின் ராயல் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் இன்று காலை வடமேற்கு பெர்த்திலிருந்து தேடல் பகுதிக்கு விரைந்தது. அதனுடன், 10 விமானங்கள் மற்றும் 9 கப்பல்கள் இன்றைய தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆஸ்கர் விருது வென்ற நியூசிலாந்து திரைப்பட இயக்குனர் பீட்டர் ஜாக்சன் தனது சொந்த ஜெட் விமானத்தை தேடல் பணிக்காக இணைத்துள்ளார்.
இந்த நிலையில், எம்.எச்.370 தேடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் விமானப் படைத் தளபதி மார்ஷல் அங்குஸ் ஹாஸ்டன், "மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை தேடும் பணி பெரும் சிக்கல் வாய்ந்ததும் கடினமானதாகவும் உள்ளது. எந்த உறுதியான தகவலும் இல்லாமல் இந்தத் தேடல் நடந்து வருகிறது" என்றார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் நடுவழியில் மாயமானது. அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
அந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்ககூடும் என்று செயற்கைக்கோள் புகைப்படங்கள் வழியே கிடைத்த தகவலை கொண்டு பல்வேறு நாடுகளில் விமானங்கள், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கைகோள்கள் தேடுதல் பணியை 25-வது நாளாக இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.