உக்ரைன் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் அரசுப் படைகளும் கிளர்ச்சிப் படைகளும் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன. இந்த உள்நாட்டுப் போரில் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 5000 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கடைப் பிடிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை அண்மையில் இருதரப்பும் மீறிய தால் அங்கு போர் தீவிரமடைந் துள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின் றனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக ரஷ்ய பகுதியில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் பெட்ரோ போரோஷென்கோவை சந்தித்து சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
இதனிடையே பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தேவும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் விரைவில் உக்ரைனுக்கு செல்கின்றனர். அவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்தித்துப் பேசுகின்றனர்.
அப்போது மீண்டும் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தத் தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை உறுதி செய்துள்ளது.
மறைமுக போர்
உக்ரைன் கிளர்ச்சிப் படைகளுக்கு ரஷ்யா ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதேபோல் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது. அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விநியோகிக்க அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனால் அமெரிக்கா, ரஷ்யா இடையே மீண்டும் மறைமுக போர் உருவாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.