இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வடமாகாண பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ருவான் நேற்று முன்தினம் பலாலியில் உள்ள பாதுகாப்பு படைகளின் தலைமையகத்துக்கு சென்றார். முப்படை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:
நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தமிழ், சிங்களம் ,முஸ்லிம் என அனைத்து தரப்பு மக்களின் சுதந்திரத்திற்காகவே ராணுவ வீரர்கள் போராடினர். நாட்டின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை. பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த கால குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்
கடந்த ஆட்சியில் ராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. அந்த இடைவெளியை குறைக்க முயற்சிப்போம்.
வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட ராணுவ முகாம்கள் அகற்றப்படாது. இதனால் சில நேரங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படலாம். இதுதொடர்பாக அரசு ஆய்வு செய்து விரைவில் தீர்வு காணப்படும். ஆனால் ராணுவத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் அளித்த பேட்டியில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதனை நிராகரிக்கும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் பேசியிருப்பது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.