உலகம்

வங்கதேச அரசியல் நிலவரம்: ஐ.நா. பொதுச் செயலர் கவலை

பிடிஐ

வங்கதேச அரசியல் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கவலை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இடைத் தேர்தல் நடத்த வலியுறுத்தி கலீதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசிய கட்சி (பிஎன்பி) கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டம் வன்முறைப் போராட்டமாக மாறியதைத் தொடர்ந்து இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனை, வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.எச்.மஹமூது அலி சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பான் கி மூன் வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நடைபெறும் அரசியல் வன்முறையும் உயிரிழப்பும் கவலை அளிக்கிறது.

வங்கதேசத்தின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கருதி, அந்நாட்டில் பதற்றத்தை தணிக்க வங்கதேச அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எதிர்க்கட்சி களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தவேண்டும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியையும் ஏ.எச்.மஹமூது அலி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் ஜான் கெர்ரி கூறும்போது, “ஜனநாயக வங்கதேசத்தில் அரசியல் போராட்டத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே வன்முறையை எதிர்க்கட்சி கைவிடவேண்டும்” என்றார்.

இத்தகவலை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT