ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பது இலங்கை அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிகட்ட போரின்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விசாரணை நடத்தி அறிக்கையை தயார் செய்துள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்ற இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனை சந்தித்துப் பேசினார்.
‘புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால் ஐ.நா. அறிக்கையை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அதிபர் சிறிசேனா கூறியதாவது:
போர்க்குற்றம் குறித்த விசாரணை அறிக்கையை 6 மாதங்களுக்கு ஐ.நா. சபை தள்ளிவைத்திருப்பது இலங்கை அரசுக்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.