மலேசிய விமானத்தின் பாகங்களை தேட ஆளில்லா நீர்மூழ்கி 7 முறை ஆழ்கடலுக்குள் சென்றும் தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், டைட்டானிக் கப்பலின் பாகங்களை தேட பயன்படுத்தப்பட்ட அதிநவீன உத்திகளை இந்த தேடலுக்கு பயன்படுத்த ஆஸ்திரேலிய கடற்படை நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையிலேயே தேடல் தொடர்கிறது.
ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் ஜான்ஸ்டன் கூறுகையில், கறுப்புப் பெட்டி மற்றும் விமானத்தின் பாகங்கள் குறித்த தகவல்களை கண்டறிய ஆழ்கடலுக்கு 7 முறை சென்ற ஆளில்லா நீர்மூழ்கி எந்த தகவலும் இன்றி திரும்பி வந்தது. இதனை அடுத்து, மிகவும் சக்திவாய்ந்த சோனார் நீர்மூழ்கியுடன் இழுவை ஸ்கேனர் பொருத்த ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
1985 ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 400 மைல் அளவில் கடலுக்கு அடியில் இருந்த டைட்டானிக் கப்பல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பயன்ப்படுத்தப்பட்ட எச்.எம்.ஏ.எஸ் என்ற கப்பல் முற்றிலும் அழிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே முறையை இப்போது மலேசிய விமான தேடலுக்கும் பயன்படுத்த திட்டமிடப்படுகிறது.
மேலும் அவர் கூறும்போது, தற்போதைய தேடல் பகுதியில் எந்த தகவலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உத்திகளை மேம்படுத்துவதற்கான வேலைகள் நடக்கிறது” என்றார்.