உலகம்

கருப்புப் பணத்தை ஒழிக்க‌ தானியங்கி தகவல் பரிமாற்றம் அவசியம்: ஜி20 மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்

பிடிஐ

கருப்புப் பணத்தை ஒழிக்க தானியங்கி தகவல் பரிமாற்ற முறையை அனைத்து நாடுகளும் அமல்படுத்த வேண்டும் என்று இந்திய நிதி இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது:

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைப்பது அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தானியங்கி தகவல் பரிமாற்ற முறையை அமல்படுத்த வேண்டும்.

இதன் மூலம் எந்தெந்த நாடுகளில் எவர் ஒருவர், சட்டத்துக்குப் புறம்பாக வரி ஏய்ப்புச் செய்து பணம் ஈட்டுவது மற்றும் பதுக்கி வைப்பது போன்ற குற்றங்களைச் செய்கிறார் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கும்.

இன்று பல நாடுகளும் வேறு வேறு பொருளாதார, வரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. இதன் மூலம் கருப்புப் பணம் பதுக்கும் ஒருவரைப் பற்றிய விவரங்களை அறிய முடிவது கடினமாகிறது.

இது தவிர, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு சர்வதேச நிதியம் போன்றவற்றில் அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்த நிதியத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வர 2010-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்.

அவ்வாறு அமல்படுத்தினால் சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் வாக்களிக்கும் விகிதா சாரம் 2.44 சதவீதத்தில் இருந்து 2.75 சதவீதம் வரை உயரும். அதன் மூலம் அதிக அளவு ஒதுக்கீடு கொண்ட 11-வது நாடு எனும் நிலையில் இருந்து 8-வது இடத்துக்கு இந்தியா உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT