ஏர்ஏசியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை வெளிப்படையாக வெளியிட முடியாது என்று இந்தோனேசியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி காலை புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 162 பேரும் பலியாகினர். பின்னர் பலதரப்பட்ட தேடல்களை அடுத்து விமானத்தின் பாகங்களும் பயணிகளின் உடல்களும் ஜாவா கடற்பகுதியில் மீட்கப்பட்டன.
இதனிடையே தேடல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு தனது அறிக்கையை இந்த வாரத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், விசாரணையின் முழு விவரத்தை வெளியிட முடியாது என்று இந்தோனேசிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் விதிப்படி, விபத்து குறித்த அறிக்கையை விபத்து நடந்த நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.