பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட தாக்குதலை வீடியோ பதிவு செய்த தீவிரவாதிகள் அதனை இ-மெயிலில் அனுப்ப முயற்சித்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் பத்திரிகையில் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பாரீஸ் நகர் அருகே உள்ள கோஷர் பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதில், தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், கோஷர் பல்பொருள் அங்காடியில் முதல் 3 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதி, அதுவரை நடந்த தாக்குதல் காட்சிகளை அந்த கடையிலிருந்து கம்ப்யூட்டரை பயன்படுத்தி இ-மெயில் செய்ய முயற்சித்ததாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த போது கோஷர் பல்பொருள் அங்காடியில் பிரான்ஸ் நாட்டின் பத்திரிகையான லெ எக்ஸ்பிரஸ் என்ற செய்தி நிறுவனத்தின் நிருபர் எரிக் பெலிட்டியர் வெளியிட்ட செய்தியில், "முதல் 3 நபரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளை போலீஸார் சுற்றி வளத்தனர். இதனால் சற்று பதற்றமடைந்த அம்தே கொலிப்ளே என்ற தீவிரவாதி, சுமார் 7 நிமிடங்களாக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை பதிவு செய்த கோப்புகளை இ-மெயில் மூலம் யாருக்கோ அனுப்ப முயற்சித்தார்" என்று குறிப்பிட்டார்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க உளவுத் துறை அதிகாரி, வீடியோ பதிவை தனி நபர் அல்லது நன்கு தெரிந்த நபர்களுக்கு தான் அவர் அனுப்பி இருக்க வேண்டும். ஊடகங்களுக்கு அனுப்பியதாக நினைக்க முடியவில்லை.
இது தொடர்பாக பல்பொருள் அங்காடியில் உள்ள கம்யூட்டர்களை ஆய்வு செய்துள்ளோம். இதிலிருந்து உரிய தகவல் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.