புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேனா 1951 செப்டம்பர் 3-ம் தேதி பொலனறுவையில் பிறந்தார். அவரது தந்தை ஆல்பர்ட் சிறிசேனா இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார்.
உள்ளூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்ரிபால சிறிசேனா, பின்னர் கண்டி குண்ட சாலை விவசாயக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பயின்று பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ரஷ்ய கல்வி நிறுவனத்தில் அரசியல் அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்தார்.
ஆரம்பத்தில் கம்யூனிச கொள்கைகளில் ஆர்வம் காட்டிய சிறிசேனா, 1967-ம் ஆண்டில் இலங்கை சுதந்திர கட்சியில் சாதாரண தொண்டராக சேர்ந்தார். 1971-ம் ஆண்டில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
சிறையில் இருந்து விடுதலை யான பின்னர் அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1970-களில் இலங்கை சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவின் உள்ளூர் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1980-களில் தேசிய அரசியலில் நுழைந்தார்.
1989-ம் ஆண்டில் பொலன்ன றுவை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் முதன்முத லாக காலடி எடுத்து வைத்தார். 1994-ல் நீர்ப்பாசனத் துறை இணை அமைச்சராக பதவியேற்றார். 2000-ம் ஆண்டில் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
2000-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2001-ம் ஆண்டில் கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடியது. அந்த அரசின் அமைச்சரவையில் சிறிசேனா நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2004-ல் வேளாண், சுற்றுச் சூழல், நீர்ப்பாசனத் துறை அமைச்ச ராக சிறிசேனா பொறுப்பேற்றார்.
விடுதலைப் புலிகளின் ‘ஹிட் லிஸ்டில்’ இருந்த அவரை குறிவைத்து 2008 அக்டோபர் 9-ம் தேதி கொழும்பில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உள்நாட்டுப் போர் இறுதி கட் டத்தை எட்டியபோது பாதுகாப் புத் துறையையும் (பொறுப்பு) கவனித்தார். அதிபர் ராஜபக்ச வெளிநாடுகளுக்குச் சென்ற போதெல்லாம் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தார்.
2010 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அவர் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். ராஜபக்சவின் நெருங்கிய நண்பராகவும் அவரின் வலது கரமாகவும் சிறிசேனா செயல்பட்டார்.
அதிபர் தேர்தலுக்கான அறி விப்பு வெளியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 2014 நவம்பர் 21-ம் தேதி எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.