தென் அமெரிக்க நாடான சிலியில் 8.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு சிலியின் இகிக் நகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் 12.5 மைல் ஆழத்தில் 8.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் புதன்கிழமை ஏற் பட்டது. இதனால் 2 மீட்டர் உயரத்துக்கு கடலலைகள் வேகமாக எழும்பின. இதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் வசிக்கும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதே போன்ற சுனாமி எச்சரிக்கை தென் அமெரிக்க பசிபிக்கடலோரப் பகுதிகளிலும், மத்திய அமெரிக்கப் பகுதிகளிலும் விடப்பட்டுள்ளது. சிலியில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை 10 மணி நேரத்துக்குப் பின் திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து வெளியிடங்களில் தங்கிய மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். வடக்கு சிலியில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 17 அதிர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்பட்டன என சிலி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிர்வுகள் சில நாட்களுக்கு இருக்கும் என சிலி பல்கலைக்கழக நில அதிர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.