சவுதி மன்னர் அப்துல்லா காலமானதைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா செவ்வாய் அன்று சவுதி அரேபியா வந்தார். இப்பயணம் அமெரிக்க-சவுதி எண்ணெய் வள பிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது.
துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சவுதியின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள சல்மானிடம், ஐ.எஸ். தீவிரவாதத்தை முறியடிப்பது, ஏமனின் கொந்தளிப்பான சூழ்நிலை, ஈரானின் அணுசக்தி கொள்கை ஆகியவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா விரும்புகிறார்.
மன்னர் அப்துல்லாவின் கீழ் ஏற்கெனவே தொடர்ந்துவந்த சவுதியின் கொள்கைகள் மேலும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் ஒபாமா மறைந்த மன்னரிடம் தொடர்ந்ததைப் போலவே புதிய மன்னரிடமும் நெருங்கிய உறவை தொடர விரும்புகிறார் என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை, மன்னர் சல்மான் நாட்டின் மூத்த எண்ணெய் வள அமைச்சர் அலி அல்-நயிமி மற்றும் சவுதி இளவரசர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று வரவேற்றார்.