பிரிட்டைன் நாட்டின் முயற்சியால் 2003-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு தொலைந்து போனதாக அறிவிக்கப்பட்ட 'பீகள் - 2' ("Beagle 2") என்ற விண்கலம் தற்போது கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் ஜீவராசிகள் உள்ளனவா என்று கண்டறிய, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகமையால், 2003-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்தக் கிரகத்தில், பீகள் 2 விண்கலம் தரையிறக்கப்படவிருந்தது. ஆனால் டிசம்பர் 19, 2003 அன்று விண்கலம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விண்கலத்தை தேடும் முயற்சிகளும் தோல்வியடைந்தன.
தற்போது செவ்வாய் கிரகத்தின் பரப்பிலேயே இந்த விண்கலம் செயல்படாமல் இருப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சி முகமையின் தலைமை நிர்வாகி டேவிட் பார்க்கர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
"பீகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அது டிசம்பர் 25, 2003 அன்று திட்டமிட்டபடி தரையிறங்கியதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்களும் கிடைத்துள்ளன" என்று பார்க்கர் கூறினார்.
85 மில்லியன் டாலர்கள் செலவில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் காணாமல் போனது 'வீரமான தோல்வி' என்று அப்போது வர்ணிக்கப்பட்டிருந்தது.