இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் மூழ்கிய ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி 9-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 28-ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மோசமான வானி லையால் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது.
162 பேரில் நேற்றுவரை 37 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மேலும் விமா னத்தின் சில உடைந்த பாகங்கள் மட்டுமே மேற்பரப்பில் மிதந்தன. அதன் பெரும் பகுதி கடலுக்கு அடியில் மூழ்கியுள்ளது.
நீர்மூழ்கி வீரர்கள் முயற்சி
அதில்தான் மீதமுள்ள பயணி களின் உடல்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. எனவே இந்தோனேசிய மற்றும் ரஷ்ய நீர்மூழ்கி வீரர்களின் உதவி யுடன் கடலுக்கு அடியில் விமா னத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஜாவா கடல் பகுதியில் இடி, மின்னலுடன் வானம் மேகமூட்டமாக இருப்பதால் மேற்பரப்பில்கூட எதையும் தெளிவாக பார்க்க முடிய வில்லை. இதனால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டறிந்து விபத் துக்கான காரணத்தை உறுதி செய்ய இந்தோனேசிய கடற்படை வீரர்கள் அதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதல்கட்ட நிவாரணம்
உயிரிழந்த விமான பயணி களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க ஏர் ஏசியா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக ஒவ்வொரு குடும் பத்துக்கும் தலா ரூ.14 லட்சத்து 40 ஆயிரத்தை அளிக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது. பயணிகளின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மொத்த இழப்பீட்டுத் தொகை இறுதி செய்யப்படும் என்று ஏர் ஏசியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உரிமம் இல்லாததால் சர்ச்சை
சுரபயாவில் இருந்து சிங்கப் பூருக்கு விமான சேவையை இயக்க வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே ஏர் ஏசியா நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை விமான சேவைக்கு உரிமம் வழங்கப்படவில்லை. ஆனால் அன்றைய தினம் விமானம் இயக்கப்பட்டு விபத்துக் குள்ளாகி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்தோனேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தீவிர விசாரணை நடத்திவருகிறது.