சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமின் தலைமை ஆலோசகராக அந்த நாட்டின் ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி ஜெ.ஒய்.பிள்ளை (80) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் சுமார் 34 ஆண்டுகள் சிங்கப்பூர் அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியுள்ளார்.
1965-ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்தபிறகு அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிள்ளை முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த 1972 முதல் 1976 வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைவராக இருந்தபோது அந்த நிறுவனத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தினார்.
மீண்டும் நியமனம்
ஆட்சி நிர்வாகத்தில் சிங்கப்பூர் அதிபருக்கு ஆலோசனை கூறுவதற்காக சிறப்பு குழு செயல்படுகிறது. இந்தக் குழுவின் உறுப்பினராக ஜெ.ஒய். பிள்ளை இருந்தார். அவரது பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து மீண்டும் அவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அதிபரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர் 4 ஆண்டுகள் இப்பொறுப்பை வகிப்பார்.