வெளியுறவு கொள்கைகளில் வழக்கமான சிந்தனைகளிலிருந்து மாறுபட்டு, எப்போதும் குறுகிய வட்டத்தை தாண்டி யோசிக்கும் பிரதமர் மோடி தான், இந்திய குடியரசு தின விழாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை அழைக்கும் யோசனையையும் அளித்தார் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக அவர் பங்கேற்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டமாக நடந்து வருகிறது. இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒருவர் விருந்தினராக பங்கேற்பது வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு நிகழ்வாகும்.
அதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை சர்வதேச நாடுகளின் பார்வையை பெற்றுள்ளது. இவ்வாறு சிறப்பு பெற்றிருக்கும் ஒபாமாவின் வருகைக்கு பிரதமர் மோடியின் யோசனையே காரணம் என்று வெளியுறவுத்துறை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய் சங்கர் கூறுகையில், "அமெரிக்க அதிபர் ஒபாமாவை குடியரசு தினவிழாவுக்கு அழைப்பது குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்ட சில நபர்களிடம் ஆலோசித்தார். அதன் பின்னர் அந்த தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டு, அமெரிக்க அதிகாரிகள் பேசும்படியும் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் நமது குடியரசு தின விழாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதற்கான ஒப்புதலை வழங்கினர். அமெரிக்க அதிபரை குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள செய்வது மிகவும் அசாத்தியமான அரசியல் நிகழ்வு. இந்த யோசனையை மோடி போன்ற சிலரால் மட்டுமே அளிக்க முடியும்" என்றார்.