உலகம்

ஏர் ஏசியா விமான விபத்து: விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிப்பு

பிடிஐ

சமீபத்தில் விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் வால்பகுதி நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் விமானத்தின் கருப்புப் பெட்டியும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28ம் தேதி 162 பயணிகளுடன் பறந்த ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தின் பகுதிகள் இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் தேடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று விமானத்தின் வால்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வால்பகுதியில்தான் விமானத்தின் கருப்புப் பெட்டியும் இருக்கும் என்பதால், விமான விபத்து தொடர்பாகப் புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த வார இறுதியில் விமானத்தின் ஐந்து பாகங்கள் கடலில் இருப்பதை சோனார் கருவி அடையாளம் காட்டியது. எனினும், கடலில் சுழல்கள் அதிகமாக இருப்பதால் நீர்மூழ்கி வீரர்களால் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை.

இதைத் தொடர்ந்து ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டோனி பெர்னான்டஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "விமானத்தின் வால்பகுதி கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனில், அதில்தான் கருப்புப் பெட்டியும் இருக்கும். முடிந்த வரையில் நாம் விமானத்தின் அனைத்துப் பகுதிகளையும் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். அதன் மூலம் நம் விருந்தினர்களின் (பயணிகள்) உடல்களைக் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களிடம் சேர்ப்பதால் அவர்களின் வேதனையை நாம் குறைக்கலாம். அதுவே எங்களின் முதன்மைப் பணி" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT