உலகம்

தீவிரவாதி லக்வி கைது உத்தரவு ரத்து: பாகிஸ்தான் அரசு மேல் முறையீடு

பிடிஐ

மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை மீண்டும் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து பாகிஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். லக்வியை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது சட்டத்தின் முன் நிற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லக்வியை விடுதலை செய் தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும். இந்த முக்கிய உண் மையை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என அரசு தனது மனுவில் தெரிவித்திருக் கிறது.

இதனிடையே லக்வி தரப்பு வழக்கறிஞர் ராஜா ரிஸ்வான் அபாசி இதுபற்றி கூறும்போது, “இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நோட்டிஸ் கிடைத்ததும், இஸ்லா மாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்தி வாதிடுவோம். இந்த விவகாரத்தில் அரசு தனது நிலையை நியாயப்படுத்தி வாதிட வலுவான காரணம் இல்லை” என்றார்.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக இந்தியா கேட்டுக் கொண்டதன் பேரில் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் லக்வி உட்பட 7 பேர் மீது வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 18-ம் தேதி லக்விக்கு பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் சிறையிலிருந்து விடுபடுவதற்கு முன்பே, அந்நாட்டு அரசு பொது அமைதி பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து லக்வி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை ஏற்ற உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ரூ.10 லட்சம் ரூபாய் பிணைத் தொகை பெற்றுக்கொண்டு நிபந்தனை அடிப்படையில் லக்வியை விடுவிக்குமாறு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. மேலும் மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையின்போது தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிட்டது.

லக்வியை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மறுதினமே ஆள் கடத்தல் வழக்கு ஒன்றில் லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 நாள் போலீஸ் காவலில் வைக்கும்படி இஸ்லாமாபாதில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லக்விக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

நீதிமன்றக் காவல் முடிந்ததையடுத்து, நேற்று அவரது காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரிஸ்வான் அப்பாசி தெரிவித்தார்.

குளிர்கால விடுமுறை முடிந்து நீதிமன்றங்கள் ஜனவரி 8-ம் தேதி மீண்டும் திறக்கப்படும்போது லக்விக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT