தனி ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் இலங்கையின் வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக அதிபர் ஆகும் முயற்சியில் வீழ்த்தப்பட்டார்.
முதன்முறையாக 2005ம் ஆண்டு ராஜபக்ச (69) இலங்கையின் அதிபரானார். 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழித்தார். அதை மட்டுமே சாதனையாகக் கருதி 2010ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார்.
இரண்டாவது முறையாக அதிப ராகப் பொறுப்பேற்ற ராஜபக்ச, விடுதலைப் புலிகளை அழித்த தன் சாதனை இலங்கை மக்களின் நினைவில் இருந்து மங்கிப் போவதற்கு முன் மூன்றாவது முறையாகவும் தானே அதிபராக வேண்டும் என்று விரும்பினார். அதைத் தொடர்ந்து அரசியலமைப்பிலும் திருத்தங்கள் கொண்டு வந்தார். பின்னர் தன்னுடைய பதவிக்காலம் முடிவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலுக்கும் ஏற்பாடுகள் செய்தார்.
ராஜபக்சவின் ஆட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்களால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த போதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்களின் மனதில் பெரும் அதிருப்தி உண்டானது.
குடும்ப ஆதிக்கம்
அவருடைய ஆட்சியில் அவரின் சகோதரர்கள் கோத்தபய மற்றும் பசில் ஆகியோர் முறையே ராணுவம் மற்றும் பொருளாதார அமைச்சர்களாகப் பதவி வகித்தனர். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மேலும் பலர் பல முக்கியமான பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்தனர். இதுவும் மக்களிடையே பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தின.
மேலும் மனித உரிமை மீறல்களுக்காகவும், சர்வாதிகாரப் போக்குக்காகவும் பல நாடுகளின் கண்டனங்களையும், விமர்சனங்களையும் ராஜபக்ச எதிர்கொண்டார். இதற்கிடையே, கடந்த ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களும் மக்களிடையே ராஜபக்ச ஆட்சியின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின.
இதையெல்லாம் அருகிலிருந்து பார்த்து வந்த புத்த மதத் தலைவர்களின் ’ஜதிக ஹெல உருமய' கட்சி, தேர்தலுக்கு முன்பாக ஜனநாயக சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்று ராஜபக்சவை எச்சரித்தது. ஆனால் அதையும் ராஜபக்ச புறக்கணித்தார். இதே கட்சிதான் 2005ம் ஆண்டு ராஜபக்ச அதிபராவதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள வீரகேதியாவில் 1945ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிறந்த ராஜபக்ச கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயின்றார். பின்னர், சுதந்திர கட்சியின் வேட்பாளராக பெலியாட்டா தொகுதியில் இருந்து 1970ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு வயது 24. அதன் மூலம் மிக இளவயதில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். 1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இவர் 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹம்பன்தோடா தொகுதியில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார்.
1994 முதல் 2001ம் ஆண்டு வரை அன்றைய அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.