லிபியாவில் வெளிநாட்டவர்கள் அதிகம் தங்கும் நட்சத்திர ஓட்டல் முகமூடி அணிந்த நபர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
ஓட்டலில் பிணைக் கைதிகளாக வைத்திருந்தவர்களில் குறைந்தது 3 பேரை அவர்கள் சுட்டுக் கொன்றதாக தெரியவந்துள்ளது.
லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள கரோந்தியா என்ற நட்சத்திர ஓட்டலுக்குள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று திரிபோலியின் பாதுகாப்பு முகமை அதிகாரி எஸாம் அல் நாஸ் தெரிவித்தார்.
இது குறித்து அந்த ஓட்டலிலிருந்து தப்பித்து வெளியேறிய மேலாளர் கூறும்போது, "முகமூடி அணிந்த 5 நபர்கள் உள்ளே நுழைந்தனர். குண்டு துளைக்காத உடை அணிந்திருந்த அவர்கள் துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டனர்.
அப்போது நாங்கள் ஓட்டலில் இருந்து பலரை வெளியேற்றினோம். உடனே அவர்கள் எங்களது பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பார்க்கிங் அருகே இருந்த கார் ஒன்றையும் வெடிக்கச் செய்தனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை" என்றார்.
ஓட்டலில் தங்கியிருக்கும் பெரும்பாலானவர்கள் ஐரோப்பா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மர்ம நபர்களிடம் பலர் பிணைக் கைதிகளாக சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.