உலகம்

அமெரிக்க வாழ் இந்தியருக்கு புலிட்சர் விருது

செய்திப்பிரிவு

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் விஜய் சேஷாத்ரிக்கு 2014-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 98-வது புலிட்சர் விருதுக்கான பட்டியல் கொலம்பியா பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இதில் கவிதைப் பிரிவில் விஜய் சேஷாத்திரிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் ‘3 செக்சன்ஸ்’ என்ற தத்துவக் கவிதைத் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் 1954-ல் பிறந்த விஜய் சேஷாத்ரி(60), தன் 5-வது வயதில் அமெரிக்காவிலுள்ள ஓஹியோவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். பல்வேறு கவிதை, கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். அவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.6 லட்சம்) ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி கார்டியன் பத்திரிகைகளுக்கு பொதுச் சேவைக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தி பாஸ்டன் குளோப் இதழின் செய்தியாளருக்கு, செய்தியாளர் பிரிவுக்கான புலிட்சர் விருது அரிவிக்கப்பட்டுள்ளது.

நாவல் பிரிவில், டோன்னா டார்ட் (தி கோல்டு பின்ச்), நாடகப் பிரிவில் ஆனி பாக்கர் (தி பிளிக்), புகைப்படச் செய்திப் பிரிவில் தி நியூயார்க் டைம்ஸ் இதழுக்கும் புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு புகைப்படப் பிரிவில், நியூயார்க் டைம்ஸ் இதழின் ஜோஸ் ஹேனருக்கு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT