இராக்கில் ஐ.எஸ். அமைப்பின் கொடியை எரித்ததாக, 2 கிராமங் களைச் சேர்ந்த 170 ஆண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
வடக்கு இராக், கிர்குக் மாகா ணத்தில் உள்ல அல்-ஷஜாரா, காரீப் ஆகிய 2 கிராமங்களில் ஐ.எஸ். கொடிகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து, இங்குள்ள 170 ஆண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக உளவுத் துறை அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கூறினார். இந்நிலையில் இத்தகவலை பிற அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “30 வாகனங்களில் வந்த தீவிரவாதிகள் இவர்களை அருகில் உள்ள ஹவிஜா நகருக்கு கடத்திச் சென்றனர். அங்கு ஐ.எஸ். அமைப்பு சார்பில் நீதிமன்றமும் சிறையும் இயங்கி வருகிறது” என்றார். அல்-ஹஜாரா கிராமவாசி ஒருவர் கூறும்போது, “சிறை பிடிக்கப்பட்ட ஆண்களுக்கு தீங்கு ஏதும் செய்யவேண்டாம் என்று பெண்கள் மன்றாடினர். இதற்கு அனைவரிடமும் விசாரித்த பிறகு கொடியை எரித்தவர்களை மட்டுமே தண்டிப்போம் என்று தீவிரவாதிகள் கூறினர்” என்றார்.
காரீப் கிராமவாசி ஒருவர் கூறும் போது, “எங்கள் கிராமத்தில் கொடியை எரித்த 15 ஆண்களை தீவிரவாதிகள் தேடினர். பிறகு 90 பேரை பிடித்துச் சென்றுள்ளனர்” என்றார்.
இராக்கில் பொதுமக்களை அதிக எண்ணிக்கையில் ஐ.எஸ். அமைப்பினர் கடத்திச் செல்வது இது முதல் முறையல்ல.
கிர்குக் மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்பின் சாவடி மற்றும் கொடியை எரித்ததாக கடந்த செப்டம்பர் மாதம் 50 பேரையும், அதற்கு அடுத்த வாரத்தில் 20 பேரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் பலர் பின்னர் விடுவிடுக்கப்பட்டனர்.
என்றாலும் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இராக் மற்றும் சிரியாவில் பொதுமக்களில் ஆயிரக்கணக்கானோரை தீவிர வாதிகள் கொன்றுள்ளனர்