ஜப்பானைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை கொல்லப்போவதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து, வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உடனடியாக நாடு திரும்பினார்.
முன்னதாக ஜெருசலேமில் அவர் கூறும்போது, “தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். தீவிர வாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகள் கூட்டாக இணைந்து செயல்படும். பிணைக் கைதிகளுக்கு தீவிரவாதி கள் எவ்வித கெடுதலும் செய்யக் கூடாது, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.
ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பு ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஜப்பான் பிணைக்கைதிகள் இருவர் மண்டியிட்டு நிற்க தீவிரவாதி ஒருவர் கத்தியை காட்டி ஆவேசமாக பேசுகிறார்.
2 பிணைக் கைதிகளையும் விடுவிக்க 72 மணி நேரத்துக்குள் ரூ.1,200 கோடி தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இருவரையும் கொலை செய்வோம் என்றும் அந்த தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக உடனடியாக நாடு திரும்பினார்.