அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் ஒபாமா இன்று உரையாற்றுகிறார்.
இக்கூட்டத்தில் பங்கேற்க, பார்வையாளர்கள் பகுதியில் உள்ள தனது மாடத்துக்கு வரும்படி, அமெரிக்க வாழ் பிரபல இந்திய மருத்துவர் பிரணவ் ஷெட்டிக்கு ஒபாமாவின் மனைவி மிஷேல் அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மிஷேல் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதில் ஒரே இந்தியரான பிரணவ் ஷெட்டி தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் கொடிய எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய்க்கு எதிரான பணியில் அமெரிக்க அரசுடன் இணைந்து இன்டர்நேஷனல் மெடிக்கல் கார்ப்ஸ் (ஐ.எம்.சி) என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவசரகால மருத்துவ சிகிச்சை நிபுணரான பிரணவ் ஷெட்டி இந்த நிறுவனத்தில் 2011 முதல் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா நோய்க்கான 2 சிகிச்சைப் பிரிவுகளை ஏற்படுத்தி, அதை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் இறுதியில் அமெரிக்கா திரும்பிய ஷெட்டி, இவ்வார இறுதியில் கினியா செல்கிறார். அங்கு ஐ.எம்.சி. சார்பில் எபோலா நோய்க்கான முதல் சிகிச்சை மையத்தை அவர் ஏற்படுத்த உள்ளார்.
எபோலா பாதிப்புக்கு முன் ஐ.எம்.சி. சார்பில் ஹைதி, லிபியா, தெற்கு சூடான், ஜோர்டான், இராக், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் சுகாதாப் பணியில் பிரணவ் ஈடுபட்டுள்ளார்.
டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு பிரணவ் ஷெட்டிக்கு மிஷேல் விடுத்துள்ள அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.