தென் கொரியாவில் படகு ஒன்று மூழ்கியதால் 300-க்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கி இறந்தும் காணாமலும் போயினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் சங் ஹாங் வொன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தென் கொரியாவில் உள்ள ஜேஜு சுற்றுலாத் தீவுக்கு 325 பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 476 பேருடன் சென்ற படகு கடந்த 16-ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 176 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதுவரை 181 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 119 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. அவர்களின் உடல்கள் மூழ்கிய படகுக்குள் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சில உடல்கள் காணாமல் போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ராஜினாமா
இந்நிலையில், தென் கொரிய நாட்டு பிரதமர் சங் ஹாங் வொன், இவ்விபத்துக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தத் துயர விபத்தைத் தடுக்க முடியாமல் போனதற்கும், உடனடியாக பதில் நடவடிக்கையில் ஈடுபடமுடியாமல் போனதற்கும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்குப் பொறுப்பேற்று நான் என் பதவியிலிருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.