கடந்த வாரம் பிரான்ஸில் பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தின் ஏமன் நாட்டுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
இது தொடர்பாக அல் - காய்தா தீவிரவாத அமைப்பின் அரேபிய தலைமை கமாண்டர் அலி-அன்ஸி பேசும் 11 நிமிடங்கள் கொண்ட வீடியோ அந்த இயக்கத்தின் இணையதளம் வழியாக வெளியாகியுள்ளது. அதில், "நபிகளை குறித்து அவர்கள் செய்த வேலைகளுக்கு பழித் தீர்க்கவே சார்லி ஹெப்டோவில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த பத்திரிகை நபிகளை விமர்சித்து கருத்துச் சித்திரம் வெளியிட்டது இஸ்லாமிய மதத்தை இழிவுப்படுத்தியதாக கருதுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி ஹெப்டோ தாக்குதலை நிறைவேற்ற திட்டமிட்டதிலிருந்து அதற்கான நிதி உதவி வரை அனைத்தையும் தாங்களே செய்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில், பிரான்ஸ் நாட்டவர்களை சாத்தான்களின் ஆதரவாளர்கள் என்று கூறியுள்ள அலி-அன்ஸி, அவர்கள் மீது மேலும் பல தாக்குதல் நடத்த காத்திருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் பத்திரிகையில் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பல்பொருள் அங்காடியில் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதில், தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கடந்த 2011-ம் ஆண்டு முகமது நபியைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டதாக இதே பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலையும் அல் - காய்தா தீவிரவாத இயக்கம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.