உலகம்

பாகிஸ்தானில் அதிவேகமாக சென்ற ஓட்டுநர்களால் விபரீதம்: பேருந்து - டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதல் - 59 பயணிகள் தீயில் கருகி பரிதாப பலி

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் பேருந்தும் - ஆயில் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன. இதில், 59 பயணிகள் உடல் கருகி பலியாயினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக்கு 2 வாகனங்களின் ஓட்டுநர்களும் அதிவேகமாக சென்றதே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் இருந்து ஷிகார்புர் பகுதிக்கு நேற்று அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரில் ஆயில் டேங்கர் லாரி வேகமாக வந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி தாறுமாறாக சாலையில் ஓடி வருவதைப் பார்த்து பேருந்து டிரைவரும் கட்டுப்பாட்டை இழந்து விட்டார். இதனால் 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வாகனங்கள் தீப்பிடித்துக் கொண்டன.

தகவல் அறிந்து மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீயில் கருகியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி இறந்தனர்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் சிலர், கண்ணாடிகளை உடைத்து உயிர் தப்பி உள்ளனர்.

இதுகுறித்து கராச்சி ஆணையர் ஷோயிப் சித்திக் கூறும்போது, "இரண்டு ஓட்டுநர்களும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி உள்ளனர். பேருந்தில் இடம் கிடைக்காதவர்கள் கூரை மீது அமர்ந்து பயணம் செய்துள்ளனர். பேருந்தில் 70 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதிவேகமே விபத்துக்குக் காரணம்" என்றார். ஜின்னா மருத்துவ மைய அவசர கால பிரிவு பொறுப்பாளர் சீமி ஜமாலி கூறும்போது, "பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேரின் சடலங்கள் ஜின்னா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயம் அடைந்த 4 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.

சிந்து மாகாணத்தில் சாலை பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது என்று புகார் கூறுகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் போலீஸார் சரியாக சோதனை நடத்துவதில்லை. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர், ஓட்டுநர்களும் அலட்சியமாக அதிவேகமாக வாகனங்களை ஓட்டுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் இதேபோல் பேருந்தும் நிலக்கரி ஏற்றி வந்த லாரியும் மோதிக் கொண்டதில், 57 பேர் பலியாயினர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆயில் டேங்கர் லாரி ஒன்று டிராக்டர் டிரைலர் மீது மோதியதில் 43 பேர் பலியாயினர்.

பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டுதோறும் 9,000-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் சராசரியாக 4,500 பேர் இறந்துள்ளனர் என்று பாகிஸ்தான் புள்ளியியல் துறையினர் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT