உலகம்

ஏர் ஏசியா விமானத்தின் 2 பெரிய பாகங்கள் மீட்பு

செய்திப்பிரிவு

இந்தோனேசிய கடல் பகுதியில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 30 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு பெரிய பாகங்கள் நேற்று மீட்கப்பட்டன.

162 பேருடன் கடலில் மூழ்கிய ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்தோனேசியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு கடற்படையினரின் தீவிர முயற்சியில் இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் பலரது உடல்கள் விமானத்தின் இருக்கையோடு பிணைந்த நிலையில் கண்டுபிடிக் கப்பட்டன. எனவே கண்ணிமைக் கும் நேரத்தில் ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கக்கூடும் என்று விமானப் போக்குவரத்து துறை நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.இந்நிலையில் விமானத் தின் உடைந்த பாகங்களை தேடும் பணியை பன்னாட்டு கடற்படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரோபோவை கடலுக்கு அடியில் செலுத்தி விமான பாகங்களை தேடி வருகின்றனர். அந்த ரோபோ அளித்த சமிக்ஞையின்படி விமானத்தின் வால் பகுதி போன்ற இரண்டு பெரிய பாகங்களை கடற்படையினர் மீட்டனர். அவை தலா 30 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளன.

ஆனால் விமானத்தின் கருப்பு பெட்டியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதனை மீட்டால் மட்டுமே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று இந்தோனேசிய கடற்படை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏர் ஏசியா விமான மீட்புப் பணியில் அமெரிக்க கடற்படையும் இணைந்துள்ளது. இதுகுறித்து அதன் லெப்டினென்ட் கமாண்டர் கிரேக் ஆடம்ஸ் கூறியதாவது:

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். போர்ட் வோர்த் கப்பல், யு.எஸ்.எஸ். சாம்சன் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை நாங்கள் 12 உடல்களை மீட்டுள்ளோம். ஜாவா கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மீட்புப் பணிக்கு இடையூறாக உள்ளது.

தற்போதைய நிலையில் சுமார் 1575 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி சுருக்கப்பட்டுள்ளது. சுமார் 29 கப்பல்கள், 17 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT