உலகம்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக புதிய போர் வியூகம்: அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலுக்கு ஒபாமா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் முதல் பாரீஸ் வரை தீவிரவாதத்தை ஒழித்திடவும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவப் படையை பயன்படுத்தும் புதிய வியூகத்துக்கு வகை செய்யவுமான தீர்மானத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தேவை என்று அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற வருடாந்திர கூட்டுக் கூட்டத்தில், அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா பேசும்போது, அமெரிக்காவின் பொருளாதார நிலை, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு உள்ள பயங்கரவாத நெருக்கடிகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பொருளாதார மற்றும் ராணுவ கொள்கைகளுக்கு உறுப்பினர்களின் ஆதரவை கோரினார்.

அவர் தன் உரையில், "நம்மால் முடியாதது என்ற அனைத்தையும் நாம் தகர்த்து எறிவோம். அமெரிக்க பொருளாதார தன்மையில் இனி வரும் காலங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். இதுவரை அமெரிக்க வரலாற்றில் சாதிக்க முடியாதவற்றை வரும் காலத்தில் நடத்திக்காட்ட நாம் செயல்பட வேண்டும்.

தீவிரவாதத்தை ஒடுக்க நாம் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தான் பள்ளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் முதல் பாரீஸ் தெருக்களில் தாக்குதல் நடத்தி ஓடிய தீவிரவாதிகள் வரை அனைத்து இயக்கங்களையும் நாம் ஒடுக்க வேண்டும்.

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக, ராணுவப் படையை பயன்படுத்தும் புதிய போர் வியூகக் கொள்கைக்கு வகை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிட உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்.

உலகில் எந்தப் பகுதி மக்களை தீவிரவாதிகள் குறிவைத்தாலும், அந்நாட்டு மக்களுக்குத் துணையாக அமெரிக்கா தோள் கொடுக்கும். பாகிஸ்தான் பள்ளியில் தாக்குதல் நடத்தியவர்களானாலும் சரி... பாரீஸ் நகரைத் தாக்கியவர்களானாலும் சரி... அவர்கள் அனைவருமே நமது எதிரிகள்தான்.

இந்த வகையில் அமெரிக்க ராணுவத்தின் உழைப்பு பாராட்டுக்குரியதாக உள்ளது. தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடரும். அவர்களது இயக்கங்களை இல்லாமல் செய்வது நமது உரிமை. இந்த நடவடிக்கையில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம்.

அமெரிக்காவின் தோழமை நாடுகளுக்கு தீவிரவாதிகள் நேரடி அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். அதே சமயம், இராக் மற்றும் அப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதன் பயனாக பல பாடங்களையும் அமெரிக்கா கற்றுள்ளது.

தீவிரவாதம் அனைத்து விதத்திலும் ஊடுருவ முயற்சிப்பது நமக்குத் தெளிவாக தெரிகிறது. நமது இணையதளங்களை இனி எந்த ஒரு நாடோ அல்லது இயக்கமோ முடக்கி, ஊடுருவி ரகசியங்களை திருட முடியாது. முக்கியமாக அமெரிக்கக் குழந்தைகளை குறிவைத்து இணைய ஊடுருவல் நடப்பது மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது. இதற்கு எதிராக நமது அரசு பல பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது" என்றார் பராக் ஒபாமா.

இந்தியப் பயணம் குறித்து...

இந்திய குடியரசு தின விழாவில் அதிபர் ஒபாமா கலந்துகொள்வதற்காக இந்தியா வருகை தரவுள்ளதைக் குறிப்பிடும் வகையில் பேசிய ஒபாமா, "ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரை இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களை பாதுகாக்க வகை செய்யும் வர்த்தக மேம்பாட்டு ஆணைய அதிகாரத்தை நிர்வகிக்க உறுப்பினர்கள் எனக்கு அதிகாரம் வழங்க வேண்டும்" என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரையில் மூலம் தனது இந்தியப் பயணத்தின்போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் இரு நாட்டு வணிக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உயர்த்துவது குறித்து முக்கியத்துவம் அளித்து பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT