அமெரிக்க பத்திரிகைகளான 'தி நியூயார்க் போஸ்ட்'-ல் ஊடுருவிய ஹேக்கர்கள், மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக போப் ஆண்டவர் பெயரில் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரபல அமெரிக்க பத்திரிகைகளான 'தி நியூயார்க் போஸ்ட்' மற்றும் 'யூனைடட் ப்ரெஸ் இன்டெர்னேஷ்னல்' ஆகியவைகளின் ட்விட்டர் பக்கங்களில் ஊடுருவிய ஹேக்கர்கள் அதில், பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவு செய்தனர். தவறான செய்திகள் பரவியதால் வாசகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களது பத்திரிகை ஹேக்கர்களால் அத்துமீறப்பட்டதாக 'தி நியூயார்க் போஸ்ட்' நிறுவனம் தெரிவித்தது.
மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று போப் ஆண்டவர் தெரிவித்ததாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் தவறான செய்திகளை ஊடுருவி பதிவு செய்துள்ளதாக 'யூனைடட் ப்ரெஸ் இன்டெர்னேஷ்னல்' பத்திரிகையும் குறிப்பிட்டுள்ளது.
அதேப் போல, அமெரிக்கா மற்றும் சீன கடற்படையினர் தங்களது போர் கப்பல்களை தென்சீன கடற்பகுதியில் நிறுத்தியுள்ளதாக 'தி நியூயார்க் போஸ்ட்'-ன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் அமெரிக்கா ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் (@CENTCOM) ட்விட்டர் வலைதள பக்கத்தில் அத்துமீறல் நடந்ததும் ஹேக்கிங்குக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.