இஸ்ரேல் நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்ட ஆய்வுப் பணியை மேற்கொண்டிருக்கும் இந்திய மாணவர் ஒருவர், அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் முதல் இந்திய மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜுல்பிகர் சேத் (27). இவர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதோடு, இஸ்ரேல் நாட்டில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வருகை தரு ஆய்வு மாணவராகவும் உள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் ஹீப்ரூ பல்கலைக்கழகம் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இங்கு 80 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள வெளிநாட்டு மாணவர்கள் சங்கத்தில் இணைந்துள்ளனர். இந்த சங்கத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த ஜுல்பிகர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜுல்பிகர் கூறும்போது, “இந்தப் பல்கலைக்கழகத்தில் நான் எந்த விதத்திலும் தரக்குறைவாக நடத்தப்படவில்லை.
மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எனது இஸ்லாமிய மத அடையாளம் ஒரு பொருட்டாகவே இல்லை. இஸ்ரேல் நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது என்பதற்கு இந்த மாணவர் தேர்தலே உதாரணம்” என்றார்.
மேலும் அவர், “இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆரம்பத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் இந்தப் பதவிக்கு இதுவரை ஓர் இந்தியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரியவந்தவுடன், இது இந்தியர்களுக்கான நேரம் என்று முடிவு செய்து தேர்தலில் போட்டியிட்டேன். வெளிநாட்டு மாணவர்களை இஸ்ரேல் நாட்டு மக்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எனது தேர்தல் பிரச்சாரம்தான் மாணவர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்தது” என்றார்.