உலகம்

பாகிஸ்தானில் மத நிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர் சுட்டுக்கொலை

பிடிஐ

பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்று விடுதலை பெற்ற 52 வயது அபித் மஹ்மூத் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று கொடூரமாகக் கொலை செய்துள்ளது.

அவரது இல்லத்திலிருந்து நேற்று மர்ம நபர்கள் இவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். பிறகு லாகூருக்கு 270கிமீ தொலைவில் உள்ள தக்சீலா பகுதியில் ரயில்வே நிலையம் அருகே ஆளரவமற்ற இடத்தில் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட இவரது சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இஸ்லாம் மதத்தின் தீர்க்கதரிசி மொகமது நபி நானே என்று இவர் கோரிவந்ததையடுத்து மத நிந்தனை வழக்கில் சிறையில் இவர் 2011-ஆம் ஆண்டு அடைக்கப்பட்டார். ஆனால், இவரது மன நிலையும், உடல் நிலையும் மோசமாகவே இவர் கடந்த வாரத்தில் அடியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மனநிலை சரியில்லாத அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதையடுத்து வேதனையடைந்த அவரது சகோதரர் போலீஸில் புகார் செய்ததையடுத்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொலையுண்ட அபித் மஹ்மூதின் உடலை உள்ளூர் இடுகாட்டில் அடக்கம் செய்ய மதத் தலைவர்கள் சிலரும் உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டின் பின்புறத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவர் தன்னைத்தானே மீட்பராக அறிவித்து கொண்டதுதான் கொலை செய்யப்பட காரணமாக இருக்கும் என்று சந்தர்ப சாட்சியங்கள் காட்டுவதாக போலீஸ் அதிகாரி முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT