உலகம்

உலகின் சிறந்த 25 இடங்களில் துபை முதலிடம்

செய்திப்பிரிவு

உலகில் காண வேண்டிய 25 மிகச் சிறந்த இடங்களின் பட்டியலில் துபை முதலிடம் பிடித்துள்ளது.

சுற்றுலா செல்பவர்களுக்காகப் பயண ஏற்பாடுகளை மேற் கொள்ளும் உலகின் மிகப்பெரிய இணையதளமான ‘ட்ரிப் அட்வைசர்', 2014ம் ஆண்டுக்கான ‘டிராவலர்ஸ் சாய்ஸ்' விருதுக்காக, உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோள்கள் கொண்டு பட்டியலிட்டது. அதில் துபை முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் கண்டுகளிக்க துபையில் 646 பொழுதுபோக்கு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சுமார் ஒரு வருடமாக உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளின் எண்ணிக்கைகள், தரம் ஆகியவற்றைப் பற்றிய விமர்சனங்களை அடிப்படை யாகக் கொண்டு 25 சிறந்த இடங்கள் பட்டியலிடப்பட்டன.

"25 சிறந்த இடங்களில் முதலாவதாக எங்களைத் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாங்கள் பெருமைப்படுத்தப் பட்டிருக்கிறோம்" என்றார், துபை சுற்றுலா மற்றும் வணிகக் கழகத்தின் முதன்மைச் செயல் அலுவலர் இஸாம் காஸிம். இந்த வருடம் துபையில் மாபெரும் உணவுத் திருவிழா நடைபெற்றது. உலக அளவிலான இசை, கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன என்றார் இஸாம் காஸிம்.

SCROLL FOR NEXT