மியான்மர் நாட்டில் பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிலவும் பதட்டமான சூழல் குறித்து அந்த நாட்டை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பிற மதத்தின் மீதான சகிப்புத் தன்மையற்ற போக்குகள் எந்த ஒரு நாட்டையும் மோசமான நிலைக்கு வீழ்த்தி விடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
டாம் மலினோவ்ஸ்கி என்ற அமெரிக்க அரசு மனித உரிமை தூதர் மியான்மர் நாட்டில் 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களை பிரித்தாளவோ அல்லது வேறு அரசியல் நோக்கங்களுக்காகவோ மத நம்பிக்கையை பயன்படுத்துவது என்பது அபாயகரமான விளைவை அளிக்கும் என்ற எங்களது கவலையை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது உண்மையில் நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம். இதன் விளைவுகளை சமாளிக்கவோ, கையாளும் திறமையோ இல்லாத நாடு இத்தகைய அபாயத்தை தொடர்ந்து செய்வது கூடாது.” என்றார்.
யாங்கூனில், ஐ.நா.வுக்கு எதிராக நூற்றுக்கணக்கான பவுத்த துறவிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஐ.நா. செயல்படுகிறது என்பதே இவர்களது ஆர்பாட்டத்திற்கு காரணமாக அமைந்தது.
பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஏற்பட்டு வரும் வன்முறைகளுக்கு 2012ஆம் ஆண்டு முதல் சுமார் 200 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1,40,000 பேர் உள்நாட்டு அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
ரோஹிங்கயா முஸ்லிம்கள் குடியுரிமை பெறுவதற்கு ஏகப்பட்ட தடை விதிமுறைகளை மியான்மர் அரசு உருவாக்கி வைத்துள்ளது. அவர்கள் மீது நிறைய கண்காணிப்பும் தடைகளும் அங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மலினோவ்ஸ்கி கண்டித்துள்ளார்.
கலப்பு திருமணம், மதமாற்றம், குழந்தைப் பேற்றில் விதிமுறைகள், ஆகிய சட்டங்கள் பவுத்தர்களை திருப்தி செய்வதற்காக அங்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்கள் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும், அரசு இத்தகைய அடக்குமுறை சட்டங்களுக்கு அளித்து வரும் ஆதரவு அங்கு சிறுபான்மையினரிடையே பெரும் அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது என்று மலினோவ்ஸ்கி கூறியுள்ளார்.