இரு வாரங்களுக்கு முன் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி கடலுக்கு அடியில் புதைந்துகிடந்த ஏர் ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டி திங்கள் அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி படையினர் ஞாயிறு அன்று கருப்புப் பெட்டி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அப்போது, சிதைந்த விமான பாகங்களுக்கு கீழ் புதைந்து கிடந்ததால் அதை மீட்கமுடியாமல் திணறினர்.
திங்கள் அன்று காலை அந்தக் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக தேடல் மற்றும் மீட்புக்குழுவின் உயர் அதிகாரி ஃப்ர்ன்சிஸ்கஸ் பாம்பேக் சோலிஸ்டியோ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவிடமிருந்து அலுவலக ரீதியான அறிக்கை ஒன்று இன்று காலை எனக்கு வந்தது. அதில் காலை 7.11- (உள்ளூர் நேரப்படி) விமானவிவரப் பதிவுக்கருவியான கருப்புப் பெட்டியை மீட்டெடுப்பதில் நாங்கள் வெற்றியடைந்துவிட்டோம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது" என்றார்.
டிசம்பர் 28-ம் தேதி இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர்ஏசியா விமானம் QZ8501 மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாகியது. அதில் சென்ற 162 பேரும் உயிரிழந்தனர்.
இதுவரை 48 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜடாயத் மாகாணத்துக்கு சொந்தமான படகில் சென்ற கடற்படை நீழ்மூழ்கி வீரர்கள் விமானத்தின் முக்கியமான கருப்புப் பெட்டியை தேடிக்கண்டுபிடிப்பதில் தொடர்ந்து முயற்சிசெய்துவந்தனர். தற்போது கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் பதிவுசெய்யப்பட்டிருந்த விவரங்களைக் கொண்டு விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பான தகவல்களைப் பெறமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.