உலகம்

ஐ.எஸ். தீவிரவாதத்தை எதிர்த்து போரிட ராணுவத்துக்கு அனுமதி: ஒபாமா வலியுறுத்தல்

பிடிஐ

ஐஎஸ் தீவிரவாத அமைப்பை எதிர்த்துப் போரிட ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் வருடாந்திர கூட்டுக் கூட்டத்தில் பராக் ஒபாமா பேசியதாவது:

தீவிரவாதிகளால் குறி வைக்கப்படுவோருக்கு ஆதரவாக உலகெங்கிலும் மக்களுடன் கைகோத்து நிற்கிறது அமெரிக்கா. தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை தேடிப்பிடித்து ஒழிப்போம். அவர்களது அமைப்புகளை உடைப்போம். நட்பு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதிகளை ஒடுக்க நான் பதவியேற்றதிலிருந்து தொய்வு ஏற்படவில்லை. ஒரு தரப்பாகவே இந்த நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.

இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதத்துக்கு எதிராக நடத்திய போரில் அமெரிக்கா பாடம் கற்றுக்கொண்டுள்ளது. கடல் மார்க்கமாக தரைப்படைகளை அனுப்புவதற்கு பதிலாக தெற்கு ஆசியா முதல் வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான நாடுகளுடன் கைகோத்து அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதை தடுத்து நிறுத்துவோம்.

இராக்கிலும் சிரியாவிலும் உள்ள அமெரிக்க ராணுவம், ஐஎஸ் தீவிரவாதிகள் முன்னேறுவதை தடுத்து நிறுத்தி வருகிறது. இந்தப் பணியில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை உலக நாடுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டவேண்டும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது இராக்கிலும் சிரியாவிலும் பெரும்பகுதியை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட ராணுவத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றுவதுதான்.

அவ்வாறு செய்தால் பாகிஸ்தானிலிருந்து பாரிஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வரை அனைவரையும் ஒடுக்குவோம். சில பகுதிகளில் யூத எதிர்ப்பு போக்கு தலைதூக்கி வருகிறது. இதை கடுமையாக கண்டிக்கிறேன்.

ஈரான் அணு ஆயுத வல்லமை படைத்ததாக ஈரானை மாறவிடாமல் தடுத்து நிறுத்த எல்லா வாய்ப்புகளையும் நான் பரிசீலிக்கிறேன்.

அதேவேளையில் பேச்சுவார்த்தை பலன் தரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதும் உண்மை. ஆனால் புதிய தடைகளை கொண்டுவந்தால் ஏற்கெனவே மேற்கொண்டுவரும் முயற்சிகள் வீணாகும்.

கடைசி வழியாக போருக்குச் செல்வதுதான் ஒரே வழி என அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். என்றார் ஒபாமா.

SCROLL FOR NEXT