அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 18 வயதான கருப்பின இளைஞர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
விளையாட்டுத் துப்பாக்கி வைத்து மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மிச்சேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் போராட்டங்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டு தற்போது சற்றே குறைந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள பெர்கிலேவில் 18 வயதான கருப்பினத்தைச் சேர்ந்த இளைஞர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த பெட்ரோல் நிலையம் அருகே 60-க்கும் மேற்பட்டோர் கூடியதை அடுத்து அந்த பகுதி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனால் அங்கு பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போஸ்ட் டிஸ்பேட்ச் என்ற பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே அந்த இளைஞர், அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கியை உயர்த்தி மிரட்டல் விடுத்ததாகவும், அதன் பிறகே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிருக்கு பயந்தே இளைஞர் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் கொல்லப்பட்ட நபருடன் மற்றும் ஒருவர் இருந்ததாகவும், ஆனால் பின்னர் அவர் தப்பி ஓடியதாகவும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
இந்த நிலையில் பலியான கருப்பின இளைஞரின் பெயர் ஆண்டானியோ மார்டின் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக சிறுவன் மிச்சேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்ட பெர்குசன் நகரிலிருந்து சில நிமிடங்களில் சென்றுவிடக்கூடிய தொலைவில் பெர்கிலேவும் அமைந்துள்ளது.
இந்த இரு நகரங்களும் மிஸ்சவுரி மாகாணத்தில் உள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் மாகாணம் முழுவதிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவன் மிச்சேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்டதால் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. பெர்குசன் நகரில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்ததால் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது போன்ற பல நிகழ்வுகள் கவனிக்கத்தக்கது.