அமெரிக்காவில் விமான நிலைய பரிசோதனையின் போது, வெடிகுண்டு வைத்திருப்பதாக விளையாட்டாக பொய் சொன்ன மருத்துவருக்கு ரூ. 55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர் மியாமியை விட்டு உடனடியாக வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
வெனிசுலாவைச் சேர்ந்த மருத்துவர் இமானுவேல் அல்வரடோ (60). இவர், போகோட்டோ செல்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது, விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான பரிசோதனை நடத்தி அவரிடம் கேள்வி கேட்டனர். அப்போது, தன் பையில் சி-4 ரக வெடிப்பொருள்களை வைத்திருப்பதாக பொய் சொன்னார்.
இதையடுத்து, அதிகாரிகள் பரபரப்படைந்தனர். உடனே, தான் நகைச்சுவையாக அதைச் சொன்னேன் என இமானுவேல் தெரிவித்தார். ஆனால், அவர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் மீது வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டது. இமானுவேல் வழக்கறிஞர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 55 லட்சம்) அபராதமாக செலுத்தினால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இமானுவேல் அபராதத் தொகையைச் செலுத்தினார். இருப்பினும் அவர் உடனடியாக மியாமியை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டார். ஒரு விளையாட்டான பொய்க்காக இமானுவேல் கொடுத்த விலை சுமார் ரூ. 55 லட்சம்.