இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் அஜித் தோவல் கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராஜபக்சவை அஜித் தோவல் சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே சுமுக உறவு நீடிப்பது குறித்து தோவல் திருப்தி தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ச, அமைச்சர் பெரீஸ் ஆகியோரையும் தோவல் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சேனா, முன்னாள் அதிபர்கள் சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் பேசிய தோவல், கடல் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோம். இருநாடுகளின் பாதுகாப்பில் கடல் எல்லை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதுதொடர்பாக இலங்கைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன் என்று தெரிவித்தார்.