வரும் காலங்களில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக பிரிட்டன் கடற்கரை பகுதிகளில் வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் கடல் அரிப்பினால் அழிந்து விடும் ஆபத்து உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இன்னும் வெளியிடப்படாத இந்த ஆய்வறிக்கை கூறும் செய்திகளை வெளியிட்டுள்ள தி கார்டியன் இதழ், “அடுத்த 20 ஆண்டுகளில் 800 கட்டிடங்களை கடல் நீர் முழ்கடித்து விடும்” என்று அந்த ஆய்வை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துக்கள் கடலின் ராட்சத அலைகளுக்கு இந்த நூற்றாண்டில் பிரிட்டன் இழந்து விடும் என்கிறது அந்த ஆய்வு.
மேலும், இவை அழியாமல் தடுப்பதற்கான செலவுகள் பயங்கரமானது என்பதால் இழப்பீடு கூட சாத்தியமில்லை என்று தெரிகிறது.
2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யார்க்ஷயர் முதல் கெண்ட் வரையிலுள்ள கடற்கரைப் பகுதிகளை மிகப்பெரிய ராட்சத அலைகள் தாக்கியதில் சுமார் 1,400 வீடுகளை வெள்ளம் பயங்கரமாகச் சூழ்ந்தது. பலவீடுகள் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டன.
இதனையடுத்து இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்று கூறுகிறது இந்த ஆய்வு.
இது குறித்து கடல் அரிப்பு ஆய்வு நிபுணர் பேராசிரியர் ராப் டக் கூறும் போது, “இது ஒரு கடினமான விவகாரம். அனைத்தையும் எப்படியாவது, எவ்வளவு செலவு செய்தாவது காப்பாற்றியாக வேண்டும் என்பது நடக்காத காரியம். இதற்கான ஆதாரங்களும் இல்லை, அப்படி இருந்தாலும் எத்தனை காலத்திற்கு அதனைச் செய்ய முடியும். இது பணம் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. இப்பகுதிகளில் மக்கள் காலங்காலமாக, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே நிறைய வரலாறுகளும் நினைவுகளும் இதனுடன் கலந்துள்ளன” என்றார்.
கார்ன்வால் கடற்கரைபகுதி அடுத்த 20 ஆண்டுகளில் 76 வீடுகளை கடல் நீருக்கு இழந்து விடும். கடந்த 50 ஆண்டுகளில் கார்ன்வாலில் மட்டும் சுமார் 132 வீடுகள் கடல் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் கார்ன்வால் முதலிடத்தில் உள்ளது. கிரேட் யார்மவுத் சுமார் 293 வீடுகளையும், சவுதாம்ப்டன் சுமார் 280 வீடுகளையும், கார்ன்வால் சுமார் 273 வீடுகளையும் இழக்க நேரிடும் என்கிறது இந்த ஆய்வு.
சாதாரண நிலையில் கடல் அரிப்புக்கு பிரிட்டன் கடற்கரைப்பகுதிகளில் அடுத்த 20 ஆண்டுகளில் 295 வீடுகள் அழியும் என்றும் மோசமான வானிலையின் விளைவாக இருந்தால் 430 கட்டிடங்கள் அழியும் என்றும் சுற்றுச்சூழல் ஆய்வு தெரிவித்துள்ளது.