பிலிப்பின்ஸ் நாட்டில் கடும் புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயந்துள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியை ‘ஜங்மி’ என்று பெயரிடப்பட்டுள்ள புயல் திங்கள்கிழமை கடந்தது. எனினும் இந்தப் பயுல் மத்தியப் பகுதியை புதன்கிழமை இரவுதான் முழுவதும் கடக்கும் என்றும் வியாழக்கிழமை வரை அந்நாட்டில் புயல் பாதிப்பு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக நேற்று இரண்டாவது நாளாக கனமழை பெய்தது. இதனால் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் நீரில் முழ்கின. மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் வீடுகளும், நெடுஞ்சாலைகளும் சேதமடைந்தன.
கட்பலோகன் என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 வேன்கள் புதைந்தன. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் டனாவுன் என்ற நகரில் நிலச்சரிவில் 5 பேர் இறந்தனர். கடலோர ரோன்டா நகரில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கியும், லூன் என்ற இடத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்களும் இறந்தனர். இதுதவிர பல்வேறு சம்பவங்களில் அந்நாட்டில் புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
மின்டானாவ் தீவில் உள்ள சுரிகாவோ டெல் சர் நகரை புயல் முதலில் தாக்கியது. இந்நகரில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இங்கு வெள்ளம் வடிந்து வருவதால் இப்பகுதி மக்கள் விரைவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்று ஆளுநர் ஜானி பிமன்டெல் கூறினார்.
கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் புயல் தாக்கியது. கடும் சேதத்தை ஏற்படுத்திய இந்தப் புயலில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 7,350-ஐ தொட்டது.