நோபல் பரிசு ஏற்பு உரை நிகழ்த்துவதற்காக கொண்டு வந்த பேப்பரை தவறுதலாக தொலைத்த கைலாஷ் சத்யார்த்தி, அதனை அரங்கில் நகைச்சுவை உணர்வுடன் தெரிவித்தார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோர் பெற்றனர்.
நோபல் பரிசை பெற்று அதற்கான ஏற்புரை நிகழ்த்த மேடை ஏறிய கைலாஷ சத்யார்த்தி, "மாநாடுகளிலும் கருத்தரங்கிலும் பல விஷயங்களுக்கான தீர்வு கிடைக்கும். அங்கு கிடைக்கும் சில தீர்வுகள் தீராத பிரச்சினைகளுக்கு தொலைதூரத்திலிருந்து கிடைத்த மருந்து போல அமையும்.
ஆனால் நண்பர்களே, இங்கு நான் தயார் செய்து வந்த நோபல் பரிசு ஏற்புரை பேப்பரையே தொலைத்துவிட்டேன்" என்று கூறினார். இதனை கேட்டு அரங்கில் கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் சிரிக்க தொடங்கினர்.
தொடர்ந்து பேசிய சத்யார்த்தி, "கவலைப்படாதீர்கள். அந்த பேப்பர் இல்லாமலே நான் எனது உரையை தொடர்கிறேன். பேப்பர் தொலைந்ததாக ஏற்றுகொண்டதற்கு நன்றி. இதுவரை நோபல் பரிசு பெற்ற எவருக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்காது, இனிமேலும் நடக்காது என்று நினைக்கிறேன்" என்று கூறி பேப்பர் இல்லாமலேயே தனது உரையை சத்யார்த்தி தொடர்ந்தார்.
ஆனால், உணர்ச்சிப் பொங்க அனைவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்பும் வகையில் உரை நிகழ்த்தினார் சத்யார்த்தி. அந்த உரையின் முழு வடிவம்: >தயை குணத்தையும் அன்பையும் உலகமயமாக்குவோம்: கைலாஷ் சத்யார்த்தி