ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணவகத்தில் புகுந்து, பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சுட்டுக் கொன்றனர்.
இந்த நடவடிக்கையின்போது பிணைக் கைதி ஒருவரும் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். சுமார் 30 பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய விஸ்வகாந்த் அங்கிரெட்டி என்ற இந்தியரும் பத்திரமாக மீட்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய நேரப்படி திங்கள் கிழமை காலை 9 மணிக்கு உணவகத் துக்குள் அந்த தீவிரவாதி புகுந்தான். செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அந்த கட்டிடத்துக்குள் புகுந்த அதிரடி படையினர் 4 மணி அளவில் பிணைக் கைதிகளை மீட்டனர். இதையடுத்து 16 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
சிட்னி நகரில் உள்ள லிண்ட் சாக்லேட் கபே உணவகத்துக்குள் நேற்று காலை துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி, அங்கிருந்த இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் விஸ்வகாந்த் அங்கிரெட்டி உட்பட 30 பேரை பிணைக் கைதிகளாக பிடித்தான்.
சிறைப் பிடிக்கப்பட்டவர்களின் கைகளில் கருப்பு நிற கொடிகளை தீவிரவாதி கொடுத்து ஜன்னல் ஓரத்தில் சிறிது நேரம் நிற்க வைத்தான். அந்த கொடியில் வெள்ளை நிறத்தில் அரபு மொழியில் இஸ்லாமிய மத வாசகங்கள் எழுதப் பட்டிருந்தன.
இதுபோன்ற கொடிகளை பல்வேறு ஜிகாதி தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த தீவிரவாதி எந்த அமைப்பை சேர்ந்தவன் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உட்பட அனைத்து கட்டிடங்களும் மூடப்பட்டன. போலீஸாரும், சிறப்பு அதிரடிப் படை வீரர்களும் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக் கைதிகளை மீட்கும் திட்டமும் வகுக்கப்பட்டது.
பிணைக் கைதிகளை பிடித்து வைத்துள்ள தீவிரவாதிக்கு 40 முதல் 50 வயது வரை இருக்கலாம் என்பதும். கருப்பு நிற கைக்குட்டையை தலையில் கட்டியிருப்பது வீடியோ பதிவில் தெரியவந்தது.
தீவிரவாதியின் கோரிக்கைகள்
அந்த தீவிரவாதி ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டுடன் பேச்சு நடத்த வேண்டுமென்றும். ஐஎஸ் அமைப்பின் கொடியை ஹோட்டலுக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் கூறினான். சிட்னி நகரில் 4 முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் அவன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியே வந்த 5 பேர்
இதற்கிடையில், தீவிரவாதி ஹோட்டலுக்குள் புகுந்த 6 மணி நேரத்தில் ஹோட்டலில் பணியாற்றிய இரு பெண் ஊழியர்கள் உட்பட 5 பேர் அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வெளியானது. ஹோட்டலில் இருந்து பதற்றத்துடன் வெளியே ஓடி வரும் அவர்களை ஆயுதம் ஏந்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அவர்கள் தீவிரவாதியால் விடுவிக்கப்பட்டனரா அல்லது தப்பி வந்தனரா என்ற விவரம் தெரியவரவில்லை.
எனினும் உள்ளே தீவிரவாதி இருக்கும் பகுதி, அவனிடம் பிடிபட்டுள்ள வர்களின் எண்ணிக்கை, அவனிடம் உள்ள ஆயுதங்கள் குறித்து அவர்களிடம் விசாரித்து போலீஸார் தகவல் சேகரித்தனர்.
நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை
ஆஸ்திரேலிய நேரப்படி இரவு சுமார் 3 மணி அளவில் ஆஸ்திரேலிய போலீஸாரும், சிறப்பு படையினரும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். முதல்கட்டமாக குண்டுகளை கண்டறிந்து அகற்றும் ரோபோக்கள் தீவிரவாதி இருந்த கட்டிடத்தை நோக்கி முன்னேறியது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய அதிரடிப் படை வீரர்கள் உணவகத்துக்குள் புகுந்து தீவிரவாதியை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இதையடுத்து தீவிரவாதியின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் கட்டிடத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த அதிரடி நடவடிக்கையின் இறுதியில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பிணைக் கைதிகளில் ஒருவரும் உயிரிழந் தார். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.