இந்தோனேசியாவில் இருந்து 155 பயணிகள் உட்பட 162 பேருடன் சிங்கப்பூர் புறப்பட்ட 'ஏர் ஏசியா' விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை புறப்பட்ட விமானம் பயணம் தொடங்கிய 42 நிமிடங்களில் சரியாக காலை 7.42 மணிக்கு கட்டுப்பாட்டு தொடர்பிலிருந்து திடீரென மாயமானதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சுரபயா விமான நிலைய மேலாளர் திரிகோரா ரஹார்ஜியோ, "மாயமான A320-200 என்ற பயணிகள் விமானத்தில் சிங்கப்பூர், பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 155 பயணிகள் மற்றும் 7 பேர் கொண்ட விமானப் பணிக்குழு இருந்ததனர். விமானத்தை கட்டுப்பாட்டு அறை கவனத்துக்கு கொண்டு வருவதற்கான தேடல் பணி தொடங்கியுள்ளது" ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தகவலில், அந்த விமானம் ஜாவா தீவுகள் மற்றும் கலிமந்தன் அருகே ஜாவா கடற் பகுதியில் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வ்விமான சிக்னல், கட்டுப்பாட்டு அமைப்புக்கு வந்தடையாததைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்தில் சிங்கப்பூர் விமான போக்குவரத்து கழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேடல் நடவடிக்கை குறித்து மேலாளர் திரிகோரா மேலும் கூறும்போது, "இந்தோனேசிய அதிகாரிகள் தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளும் விமானப் படை அதிகாரிகளும் சி-130 ரக போர் விமானங்கள் மூலம் மாயமான விமானத்தை தேடி வருகின்றனர்.
தற்போதைய நிலை வரை விமானம் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் உள்ளது கவலை அளிப்பதாக இருக்கிறது. தேடும் பணிக்கு ஏர்ஏசியா அதிகாரிகளும் ஒத்துழைத்து வருகின்றனர். தகவல்கள் கிடைக்கும் நிலையில், அதனை நாங்கள் உடனுக்குடன் ஊடகங்கள் வழியாகவும், பயணிகளின் குடும்பத்தினருக்கும் தெரிவிப்போம்" என்றார் அவர்.
ஹெல்ப்லைன்
ஏர் ஏசியா விமான நிறுவனம், பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகவல் தொடர்பு வசதிக்காக +622129850801 என்ற உதவி மைய எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
மாயமான விமானம் ஏர் ஏசியா இந்தோனேசியா நிறுவனத்தைச் சேர்ந்தது ஆகும். இந்நிறுவனம் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். தென்கிழக்கு ஆசியாவில் மலிவு கட்டணத்தின் மூலம் பெரும்பகுதி சந்தையை தம்வசம் வைத்துள்ளது ஏர்ஏசியா.
விமானம் மாயமாகி இதர தகவல்கள் ஏதும் கிடைக்காததால் பயணிகளின் உறவினர்கள் செய்வதறியாத சோகத்தில் உறைந்து சிங்கப்பூர் சாங்கி விமானத்தில் குவி்ந்துள்ளனர்.
தயார் நிலையில் இந்திய கடற்படை
மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேட இந்திய கடற்படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் ஒரு போர்க்கப்பலும் அந்தமான் கடல் பகுதியில் 2 போர்க்கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல் பி-81 போர்விமானமும் தேடுதல் பணிக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவை தலைமையிடமாக கொண்டு ஏர் ஏசியா நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் டோனி பெர்னாண்டஸ் என்பவர் நடத்துகிறார். இவரது தந்தை இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். தாயார் தென்னிந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்.
அந்தந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து டோனி பெர்னாண்டஸ் ஏர் ஏசியா நிறுவனத்தை விரிவுபடுத்தி வருகிறார். கடந்த ஜூனில் இந்தியாவில் ஏர் ஏசியா இந்தியா விமான சேவையை அவர் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய விமான சேவையில் 3-வது விபத்து
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் சென்று கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. இந்த விமானம் என்ன ஆனது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.
கடந்த ஜூலை 17-ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் வான் பரப்பில் பறந்தபோது மர்மமான முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் நடுவானில் மாயமாகி யிருப்பது அந்த நாட்டு மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.