வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போர்க் குற்றங்கள் தொடர்பாக, பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் ஏ.டி.எம். அசருல் இஸ்லாம் என்பவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்துகொண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கடத்தல், கொலை, இனப்படுகொலை, சித்திரவதை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகள் அசருல் இஸ்லாம் மீது சுமத்தப்பட்டிருந்தது. இதில் 5 குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அசருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
எனினும் இந்த தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அசருல் மேல்முறையீடு செய்யமுடியும். 1971-ம் ஆண்டு போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் உயர்நிலை தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில், இறுதியாக அசருல் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு, டாக்கா மத்திய சிறை மற்றும் அதில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுற்றுச்சுவர்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, போலீஸார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அசருல் இஸ்லாம், 2012 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று அரசு வழக்கறிஞர்கள் கூறும்போது, “இவ்வழக்கில் தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. போதுமான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளோம்” என்றனர்.
எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் கூறும்போது, “பொய் சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றனர்.