சோமாலியாவில் செயல்படும் அல்-ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரை குறி வைத்து அந்நாட்டில் அமெரிக்கா வான் வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை அந்நாட்டு ராணுவ தலைமையகமான பெண்டகன் நேற்று உறுதி செய்துள்ளது.
அல்-காய்தாவுடன் தொடர் புடைய தீவிரவாத இயக்கமான அல்-ஷபாப் ஆப்பிரிக்க நாடு களில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அல்-ஷபாப் என்ற அரேபிய சொல்லுக்கு நல்ல இளைஞன் என்பது பொருளாகும். ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வருகிறோம் என்ற அறிவித்து இந்த அமைப்பினர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளன.
ஏற்கெனவே சிரியா, இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா, தனது தாக்குதல் பட்டியலில் அல்-ஷபாப் அமைப்பையும் சேர்த்துக் கொண்டுள்ளது. அந்த தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரை குறிவைத்து சோமாலியாவில் அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன.
இது தொடர்பாக பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கெர்பி கூறியது: சோமாலியாவில் தீவிரவாத தலைவர் பதுங்கியிருக்கும் இடம் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை குறிவைத்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் கொல்லப்பட்டு விட்டாரா என்பது குறித்து தகவல் சேகரித்து வருகிறோம். இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.
எனினும் தாங்கள் குறிவைத்த தீவிரவாத தலைவரின் பெயரை அவர் கூறவில்லை. முன்னதாக கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று சோமாலியாவில் ஆப்பிரிக்க அமைதிப் படை முகாமில் புகுந்து அல்-ஷபாப் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 ராணுவ வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். கடந்த செப்டம்பரில் அமெரிக்கா தங்கள் இயக்க தலைவர் ஒருவரை கொன்று விட்டது. அதற்கு பழிவாங்கவே இத்தாக்குதல் என்று அல்-ஷபாப் அறிவித்தது. இந்நிலையில் அல்-ஷபாப் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.