உலகம்

அமெரிக்க பொது சுகாதார தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கர்: ஒபாமாவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு

பிடிஐ

அமெரிக்காவின் பொது சுகாதார தலைவராக (சர்ஜன் ஜெனரல்) இந்திய வம்சாவளி அமெரிக்கரான விவேக் மூர்த்தி அதிபர் ஒபாமாவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்தப் பரிந்துரையை அமெரிக்க செனட்டர்கள் சிலர் எதிர்த்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அங்கு இந்திய அமெரிக்கர்கள் விவேக் மூர்த்திக்கு ஆதரவாகப் பிரச்சாரம் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் சர்ஜன் ஜெனரல் பதவி மிக முக்கியமான ஒன்றாகும். அந்தப் பதவியில் அமர்பவர் நாட்டின் பொது சுகாதாரச் சேவைக்குத் தலைமையேற்று வழிநடத்துவார்.

விவேக் மூர்த்தி ஆயுத பயன்பாடுகளுக்கு எதிரானவர் ஆவார். அத‌னால் செனட்டில் உள்ள 'ஆயுத பயன்பாட்டு உரிமை' ஆர்வலர்கள் பலர் இவரை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக் கோரி இந்திய அமெரிக்கர்கள் பலர் பிரச்சாரம் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து செனட்டர் பார்பரா மிகுல்ஸ்கி கூறும்போது, "விவேக் மூர்த்தியின் திறமை மீது சந்தேகம் கொண்டதால் இந்த எதிர்ப்பு ஏற்படவில்லை. மாறாக இந்தப் பதவிக்கு வெளியில் உள்ள கொள்கை விஷயங்களால் ஏற்படும் சிக்கல்கள்தான் அவரின் பரிந்துரைப்பை எதிர்க்கக் காரணமாகியுள்ளது. என்னுடைய சக செனட்டர்கள் தங்களின் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து இவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார். விவேக் மூர்த்தியின் பூர்விகம் கர்நாடக மாநிலமாகும்.

SCROLL FOR NEXT