பாகிஸ்தானில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 10 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேசிய சுகாதார சேவை மையத்தால், தாலஸீமியா எனும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாதில் சில சிறுமிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, ரத்தம் செலுத்தப்பட்ட சிறுமிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக உள்நாட்டு பத்திரிகையான டான் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ரத்தசோகை எதிர்ப்பு கூட்டமைப்பின் பொது செயலாளர் யாஸ்மின் ராஷீத், "இந்த விவகாரத்தில் தனி நபர்களை குற்றம் கூற சாத்தியமில்லை. இவர்களுக்கு ரத்தம் செலுத்துப்பட்டதன் மூலம் தான் தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கு பலருக்கு பாதுகாப்பற்ற முறையில் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.