வட கொரியாவில் உள்ள சிறைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்தச் சிறைகளில் மனித உரிமைகள் மீறப்படுவதைக் கண்டித்து, வட கொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று சர்வ தேச மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது வட கொரியாவில் இருந்து வெளியேறிய இரண்டு இளைஞர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட வெளியுறவுத்துறை இணையமைச்சர் டாம் மலினோவ்ஸ்கி, வட கொரியாவை நோக்கி `நீங்கள் யார் என்பது தெரியும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும் தெரியும்' என்று எச்சரித்தார்.
வட கொரியாவில் சுமார் 1,20,000 அரசியல் கைதிகளைச் சட்டத்துக் குப் புறம்பாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதை மனதில் கொண்டே டாம் மலினோவ்ஸ்கி, மேற்கண்ட கருத்தை வெளியிட்டதாகக் கூறப் படுகிறது. மேலும் அவர், `வட கொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து ஐ.நா., ஆய்வு செய்து இந்தப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லும்' என்றார்.
வட கொரியாவுக்குப் பாதகமான முடிவுகள் ஏதேனும் எடுக்கப்பட்டால், அதன் நட்பு நாடான சீனா அதை எதிர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.